Perukaranai Madabusi Sriman Chakravarthiyaarya Maha Desikan

Kannikaa Dhaanam
Home
God always comes for your rescue !
Dharmam
Kannikaa Dhaanam
The Twenty-four steps !
Like Emberumaan, Thaayaar too takes Avataar
Mouna Vritham
Ten + Three + One
Pushpanjali

Swami's great thoughts

கன்னிகாதானம்

உலகத்தில் கன்னிகாதானம், பாணிக்ரஹணம், விவாகம் என்றெல்லாம் சொல்வது வழக்கம். இந்தப் பதங்களுக்கு அர்த்தம் வேறாக இருந்த போதிலும் கருத்து ஒன்றுதான். பெண் வீட்டுக்காரன் விவாகத்தை நிச்சயித்துப் பத்திரிகை போடும்போது, 'இந்தப் பெண்ணைக் கன்னிகாதானம் செய்வதாகப் பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்டு' என்று எழுதித் தெரியப்படுத்துகிறான். பிள்ளை வீட்டுக்காரன் பத்திரிகை போடும்போது, இந்தப் பெண்ணைப் பாணிக்ரஹணம் செய்து கொள்வதாகப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு' என்று அச்சிட்டு வெளிப்படுத்துகிறான். கடைசியில் செய்யும் காரியம் ஒன்றேதான். ஆனாலும் பெண்பெற்றவன் பெண்ணைக் கொடுக்க அதிகாரியானபடியால் கன்னிகாதானம் என்று அவனைச் சேர்ந்தவர்கள் சொல்லுகிறார்கள். பிள்ளை வீட்டுக்காரனுடைய புதல்வன் அந்தப் பெண்ணின் கையைப் பிடிக்கிறபடியால் பாணிக்ரஹணம் என்று அவனைச் சேர்ந்தவர்கள் சொல்லுகிறார்கள்.

ஒருவன் ஒரு பிராமணனுக்குத் தங்கத்தைத் தானம் செய்கிறான். வெள்ளி, தானியம், பூமி இவை அனைத்தையும் தானம் செய்கிறான். இப்படிப் பல பொருள்களைத் தானம் செய்வதைக் காட்டிலும் கன்னிகையின் தானமே மிகவும் உத்தமமானது. எல்லாத் தானத்தைக் காட்டிலும் இந்தத் தானத்தையே சாஸ்திரங்கள் புகழ்ந்து பேசுகின்றன; 'ஸர்வஸ்மாதபி தாநாத் வை கந்யாதாநம் பரசஸ்யதே' என்று. கன்னிகையை ஒருவனுக்குக் கொடுக்கும்போது என்ன சங்கல்பம் செய்து கொள்கிறான் என்பதைக் கவனியுங்கள். 'தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம் ஆத்மநச்ச ஏகவிம்சதிகுலோத்தாரணார்த்தம் கந்யகாதாநாக்ய மஹாதாநம் கரிஷ்யே' என்று சொல்லுகிறான். அதாவது, 'எனக்கு முந்திய பத்துக் குலங்கள், பிந்திய பத்துக் குலங்கள், எனது குலம் ஆகிய இருபத்தோரு குலங்கள் மேன்மையாக விளங்க வேண்டும் என்பதற்காகக் கன்னிகாதானம் என்ற பெரும் தானத்தைச் செய்கிறேன்' என்கிறான். கன்னிகாதானம் செய்வதனால் இருபத்தோரு குலங்களுக்கு நல்ல கதி ஏற்படுகிறது என்றால் இப்படிப்பட்ட பலன் எந்தத் தானத்துக்கு உண்டு? ஆகையாலேயே இந்தத் தானம் பெரிய தானமாகிறது. இதில் ஒரு விசேஷம் உண்டு. மற்ற தானங்களைச் செய்த பிறகு, 'இது உன்னுடையது. எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை' என்று சொல்வதுண்டு. கன்னிகாதானத்தில், 'இந்தப் பெண் உன்னுடையவள்' என்றுதான் சொல்வது. 'எனக்கும் இந்தப் பெண்ணுக்கும் சம்பந்தமில்லை' என்று சொல்வதில்லை. ஏனேன்றால் அது உங்களுக்கே தெரிந்திருக்கும்.

இப்படிப் பலபடியாலும் கன்னிகாதானம் சிறந்ததானபடியால் புருஷப்ரஜையைப் பெற்றவனைக் காட்டிலும் ஸ்திரி ப்ரஜையைப் பெற்றவன் அதிகப் பாக்கியசாலி என்றே கூற வேண்டும். அதிலும் அதிகமாகப் பெண் குழந்தையைப் பெற்றவன் மிக்க பாக்கியசாலி. இப்படிப் பல பெண்களைத் தகுந்த வரனுக்குத் தானமாகக் கொடுக்கிறபடியால் அதிலிருந்து உயர்ந்த புண்ணிய விசேஷத்தை அவன் பெறுகிறான். தன் பெண் குழந்தைகளுக்குத் தகுந்த வரன்களைப் பார்த்துச் சீர் முதலியவற்றைச் செய்து கொடுப்பது ஒன்றுதான் கஷ்டம். வைரத் தோடு, வெள்ளிப் பாத்திரங்கள், தங்க பூஷணங்கள், வரதக்ஷிணை இவற்றைத் திரட்டிக் கொடுப்பது ஏழைகளுக்கு எளிதல்ல. எவ்வளவோ தொகை தொகையாக ரூபாயைச் சம்பாதிப்பவனுக்குச் சுலபமாகலாமோ என்னவோ! ஏழைக் குலத்தில் பிறந்தவன் இவை எல்லாவற்றையும் சம்பாதித்துச் சேர்த்துக் கொடுப்பது எப்படி முடியும்?

இப்படிச் சீர்வரிசைகளைச் செய்யாவிட்டால் பிள்ளைவீட்டுக்காரனோ, அவனைச் சேர்ந்தவனோ பிள்ளையோ கண்ணெடுத்தே பார்க்கமாட்டேன் என்கிறார்கள். ஆகையால் பல பெண்கள் தனக்குப் பிறந்திருந்தால் சீர் முதலியவற்றை செய்து கொடுப்பது என்பது ஒன்றுதான் கஷ்டம். தன் சக்திக்கு அநுகுணமாக யாசித்தோ, யாசிக்காமலோ, சிரமப்பட்டுக் கன்னிகைகளைத் தானம் செய்துவிட்டால் அளவற்ற பலனை அடைந்து எல்லையற்ற ஆனந்தத்தைப் பெறுவான் என்பது திண்ணம். ஆகையால் பிறரை யாசித்தாவது தன் பெண்ணைத் தானம் செய்ய முயல வேண்டும். இவ் விஷயத்தில் ஏழ்மைப்பட்டவனுக்குப் பல கஷ்டங்கள் இருக்கத்தான் கூடும். ஆகையால்தான், 'கந்யாபித்ருத்வம் து:காய' பெண்ணுக்குத் தகப்பனாக இருக்கும் தன்மை மிகக் கஷ்டத்தின் பொருட்டு' என்று சொல்வது வழக்கம்.

இங்கு வேடிக்கையாக ஒரு கதை சொல்வதுண்டு. ஒருவன் தனக்கு விவாகமானதும் பல பெண்களுக்குத் தகப்பனாகிவிட்டான். அவனோ அதிக வருமானமில்லாதவன். எப்படியாவது தன் முதற் பெண்ணுக்காவது விவாகம் செய்ய எண்ணி, யாசிப்பதற்கு நகரங்களுக்குச் சென்றான். பிரபுக்கள் இவனுடைய கஷ்டத்தை அறிந்திருந்தும் நிறையப் பணம் கொடுப்பார்கள் என்று சொல்லிவிட முடியாதே! எங்கோ யாரோ ஒரு மகான் மனஸ்வியாகவும் உதாரராகவும் இருப்பார். அப்படிப்பட்ட ஓரிருவர் கொடுப்பர். மற்றவர்கள் பாங்கிலும் பெட்டியிலும் பணம் நிறைய வைத்திருந்த போதிலும் தர்ம சிந்தையே இல்லாமல், 'இல்லை' என்றே சொல்லிவிடுவார்கள். பெண்ணைப் பெற்ற இவன் ஆங்காங்கே அலைந்து ஸ்ரீரங்கம் சென்றான். ஸ்ரீரங்கநாதனை கண்குளிர வணங்கினான். நம்பெருமாளை பார்த்ததும் இவனுக்கு ஓர் ஐயம் ஏற்பட்டுவிட்டது. ஸ்ரீரங்கத்தில் பகவான் இரு கைகளையும் நன்றாக நீட்டிக்கொண்டு கவலையற்றவராகத் தூங்குகிறார். இதைக் கண்டதும் இவன் "ஸ்வாமிந், இரண்டு கைகளையும் நீட்டி ஆதிசேஷன் என்னும் படுக்கையில் விசேஷமாகத் தூங்குகிறீரே! தேவரீர் தூக்கத்திற்குத் தட்டுத் தடங்கலே கிடையாதா? ஒரு நிமிஷங்கூடப் படுக்கை போட்டுக் கொண்டு கவலையற்றுத் தூங்க என்னால் முடியவில்லையே? ஓகோ! உமக்கோ உம்முடைய குலத்திலோ ஒரு பெண்கூடப் பிறக்கவில்லை போலிருக்கிறது. அப்படிப் பிறந்திருந்தால் என்னைப் போல் பணத்துக்கு அல்லாட மாட்டீரா? மானமும் போய்விடாதா? இப்படி நன்றாகப் படுத்துக் கொண்டு தூங்குகிறபடியால் உமது வம்சத்திலேயே பெண் பிறக்கவில்லை போலிருக்கிறது" என்றானாம்.

சேஷே சேஷே விசேஷேண ப்ரஸாரிதகரத்வய: |
தநமாநஹரா கந்யா கிம் ந ஜாதா குலே தவ? ||

ஆகையால் பெண்ணுக்குத் தகப்பனாக இருக்கும் தன்மை மிக்க கஷ்டத்தைக் கொடுக்கும் என்பது வாஸ்தவம். ஆயினும் கஷ்டப்பட்டாவது பெண்களைப் பிறருக்குத் தானம் செய்துவிட்டால் அளவற்ற புண்ணியத்தை அடைவான். கோடி கன்னிகாதானம் என்று சில வம்சத்தாரைச் சொல்லுகிறார்கள். கோடி என்று ஒரு பெண்ணுக்குப் பெயரை வைத்து அந்தப் பெண்ணைத் தானம் செய்தார்கள் என்றோ, ஒருவருக்குக் கோடி கன்னிகைகள் பிறந்து அவர்களைத் தானம் செய்தார்கள் என்றோ, அவ்வம்சத்தில் கிரமமாகக் கோடி கன்னிகைகள் பிறந்து அவர்களைத் தானம் செயதார்கள் என்றோ அவர்களுக்கு அந்தப் பெயர் வந்தது. பெயர் வந்ததற்குக் காரணம் இப்படியாகத்தான் இருக்க முடியும். வேறுவிதமான காரணங்கள் இருந்தாலும் அவற்றில் நமக்குக் கண்ணோட்டம் இல்லை. கன்னிகாதானம் செய்து உயர்ந்த அந்தப் பெயரை அடைந்தார்கள் என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.

ஆண் ஸந்ததியைவிடப் பெண் ஸந்ததிதான் சிறந்தது என்பதை, 'புத்ராத் சதகுணம் புத்ரீ யதி பாத்ரே ப்ரதீயதே' என்று சொல்வதுண்டு. அதாவது - புத்திரணைக் காட்டிலும் பெண் நூறு மடங்கு உயர்ந்தவன். இதற்கு என்ன காரணம் என்றால் உயர்ந்த ஸத் பாத்திரத்தில் அந்தப் பெண்ணைக் கொடுத்தால், அதனால் இவன் உயர்ந்த புண்ணியத்தை அடைகிறான் என்று.

இங்கு, 'பாத்ரம்' என்பது 'உயர்ந்த வரன்' என்ற அர்த்தத்தைச் சொல்வதற்காக வந்தது என்று சிலர் கூறுவர். ஆனால் இங்கு வேறுபட்ட பொருளைக் கூறுவதற்குத் தான் வந்தது. பாத்திரம் என்ற சப்தத்தின் மேல் ஏழாம் வேற்றுமை சேர்த்தால் 'பாத்ரே' என்று ஆகும். 'பாதா' என்ற சப்தத்தின் மேல் நான்காம் வேற்றுமை சேர்த்தால் 'பாதரே' ஆகும். இங்கு, 'கொடுக்கப்பட்டால்' என்று மேலே கூறப்பட்டபடியால், நான்காம் வேற்றமையைத்தான் கொள்ள வேண்டும். 'ப்ராஹ்மணாய காம் ததாதி. அந்தணனுக்குப் பசுவைக் கொடுக்கிறான்' என்றே சொல்ல வேண்டும். 'அந்தணனிடத்தில் பசுவைக் கொடுக்கிறான்' என்று சொல்வதில்லை. ஆகையால், 'பாத்ரு' என்ற சப்தத்தின் மேல் நான்காம் வேற்றுமை கொண்டது 'பாத்ரே' என்ற சப்தம். பானம் பண்ணுகிறவன் பொருட்டு அல்லது ரக்ஷிக்கிறவன் பொருட்டு என்பது இதன் பொருள். நாம் ஒருவனுக்குப் பெண்ணைக் கொடுத்தால் அவளிடத்தில் ஆனந்த ரஸத்தை அவன் (பானம்) குடிக்க வேண்டும். அப்படிப்பட்ட புருஷனுக்குக் கொடுக்க வேண்டும். எப்பொழுதும் பெண்ணை வைதுகொண்டும், மிரட்டிக்கொண்டும், கோபத்தால் சினந்துகொண்டும், அடிக்கடி அடித்துக்கொண்டும் இருப்பவனுக்குக் கொடுப்பது பெரும் பாவத்தைக் கொடுக்கும். வேண்டிய சமயத்தில் வேண்டிய பொருளை வாங்கிக் கொடுத்து ஒரு விதமாகவும் மனத்துக்குக் கோபமோ கஷ்டமோ வராமலிருக்கும்படி பெண்ணை எவன் வைத்துக்கொள்வானோ அப்படிப்பட்டவனுக்கே கொடுக்க வேண்டும். ஆகையால்தான் மாப்பிள்ளை விஷ்ணுபோல் பூஜிக்கக்கடவன். 'ஜாமாதா விஷ்ணுவத் பூஜ்ய:' என்று பெரியோர் சொல்வதுண்டு. பகவானை எப்படி நாம் ஆராதிக்கிறோமோ அப்படியே மருமகனையும் பூஜிக்க வேண்டும். கெளரவிக்க வேண்டும். வேண்டியவற்றை வாங்கிக் கொடுத்துத் திருப்தி செய்ய வேண்டும்.

இவ்விஷயம் எல்லா மருமகனுக்கும் என்று நினைக்க வேண்டாம். நம் பெண்ணை மணந்துகொண்டு அடித்தும் வைதும், சேலை முதலியவற்றை வாங்கிக் கொடுக்காமலும் எப்பொழுதும் உபத்திரவம் செய்துகொண்டு இருக்கிறவர்களைப் பூஜிக்க வேண்டும் என்பதில்லை. பகவான் எப்படித் தன் மனைவியான லக்ஷ்மையை மார்பிலேயே வைத்துக் கொண்டு ஆதரத்துடன் இருக்கிறானோ அப்படி எவன் நம் பெண்ணை ஆதரவுடனும் பரிவுடனும் எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்து மகிழ்விக்கிறானோ அப்படிப்பட்ட மாப்பிள்ளையைக் கெளரவிக்க வேண்டும் என்பது இதற்கு கருத்து. இவை எல்லாவற்றையும் மனத்தில் வைத்துக் கொண்டுதான் கன்னிகையைத் தானம் செய்யும்போது அதற்குத் தகுந்தாற்போல் ஒரு மந்திரத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

கந்யாம் கநகஸம்பந்நாம் ஸர்வாபரண பூஷிதாம் |
தாஸ்யாமி விஷ்ணவே துப்யம் ப்ரஹ்மலோ கஜிகீஷயா ||

என்ற மந்திரத்தைச் சொல்லி, அனைவரும் தானம் செய்வது வழக்கம். 'எல்லா ஆபரணங்களோடு கூடியவளும், தங்கக் கொடிபோல் உள்ளவளுமான என் கன்னிகையை, விஷ்ணுவான உனக்கு, அளவற்ற ஆனந்தத்தைக் கொடுக்கக்கூடிய பிரம்மலோகத்தை அடைய விரும்பிக் கொடுக்கிறேன்' என்பது இதன் கருத்து. இங்கே சாதாரணமான மனிதனுக்குத்தான் பெண்ணைக் கொடுக்கிறோம், ஆனாலும் அவனை விஷ்ணு என்று நினைக்க வேண்டும் என்று கருதி, 'விஷ்ணுவான உனக்கு' என்கிறோம்.

இப்படி விவாகம் என்றோ, பாணிக்ரஹணம் என்றோ, கன்னிகாதானம் என்றோ சொல்லி, வந்த ஒரு வரனுக்குத் தன் பெண்ணை நீர்த்தாரையுடன் தானம் செய்வது என்ற திருமணத்தை ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு கிராமத்திலும் நடத்தி வருகிறார்கள். இந்தத் திருமணத்துக்குப் பந்துக்களும் வேண்டியவர்களும் சென்று அவர்கள் மூலமாகப் பெரிய சம்மானத்தைப் பெற்றும் அவர்களுக்கும் சம்மானம் செய்தும் வருகிறார்களே; இதை மாத்திரம் முக்கியமான கருத்தாக எண்ணி இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், அந்த விவாகத்தில் ஓர் ஆழ்ந்த கருத்தையும் ஆலோசித்து ஊகித்துக் கொள்ள வேண்டும். இந்த மந்திரம் விவாகத்துக்குச் செல்கிறவர்களுடைய காதுகளில் பல தடவை ஒலிக்கும். அவ்வப்போது நன்கு ஆலோசித்துப் பார்த்தால் ஓர் அரிய பெரிய விசேஷ அர்த்தம் புலப்படும். 'விஷ்ணுவுக்குக் கன்னிகையைக் கொடுக்கிறேன்' என்று சொன்னதனால், 'புருஷோத்தமனான பகவானுக்கு, கன்னிகைகளுக்குச் சமமாக உள்ள நம்மை இம்மாதிரிதான் ஆசார்யன் கொடுக்கிறான்' என்பதை ஊகித்துக் கொள்ள வேண்டும்.

இதை நன்கு விளக்குகிறோம். பகவான் ஒருவனே நம் அனைவருக்கும் கணவன், யஜமானன், பர்த்தா, புருஷன்; நாம் அனைவரும் பெண்களே. உலகத்தில் பெண்களாகச் சிலரைப் பார்க்கிறோமே, அவர்கள்தாம் பெண்கள் என்று நினைக்க வேண்டாம். ஆண்களான நாமும் பெண்களே, உடலில் ஆணுக்கு வேண்டிய அடையாளங்கள் இருக்கின்றனவே என்று நினைக்க வேண்டாம். இவை எல்லாம் அவரவர் செய்த பாவ புண்ணியங்களை அநுஸரித்து உண்டாகின்றன. எப்படித் தேவதையாகவும் மனிதனாகவும் மிருகமாகவும் மரமாகவும் ஒருவன் பிறக்கிறானோ அம்மாதிரியேதான் பெண் ஆண் என்ற பிறப்பும். ஒரு குரங்கைப் பார்த்து அதிலுள்ள ஆத்மா என்பது குரங்கே என்று சொல்ல முடியுமா? அது செய்த வினையை முன்னிட்டுக் குரங்குடல் பெற்றுள்ளது. ஆத்ம சொரூபத்துக்கு ஒருவித வேறுபாடும் இல்லையே? ஆனால் பெண்களை மாத்திரம் பெண் என்று ஏன் சொல்ல வேண்டும் என்றால், புருஷர்களுக்கு அவர்கள் அடங்கியிருப்பதனாலும், அவர்களுக்காகவே ஏற்பட்டவர்களானபடியாலும் அவர்களைப் பெண் என்று கூறுகிறோம். இது பொல் ஆண்களான நாமும் பகவானுக்காகவே ஏற்பட்டபடியாலும், அவனுக்கே அடங்கியிருக்க வேண்டியதனாலும், நாமும் பெண்களே. ஆகையால் ஒரு புருஷனுக்கும் பெண்ணுக்கும் விவாகம் நடப்பது போல் நமக்கும் பகவானுக்கும் ஏற்படுகிறது ஓர் விவாகம். இதுதான் சரணாகதி, ப்ரபத்தி, பரந்யாஸம், ஆத்மஸமர்ப்பணம். இதைத்தான் ஆசார்யர்கள் விஷ்ணுவுக்கு நம்மை ஸமர்ப்பிப்பதாகக் கருதிச் செய்கிறார்கள். இதுதான் கன்னிகாதானம். இதுதான் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தம். அந்தப்புர ஸித்தாந்தம் என்று சொல்லப் படுகிறது.

ஸ்ரீஸ்வாமி தேசிகன் இதை நன்கு விவரித்துக் காட்டுகிறார்.

தத்தா: ப்ரஜா: ஜநகவத் தவ தேசிகேந்த்ரை:
பத்யாபிநந்த்ய பவதா பரிணீயமாநா: |
மத்யே ஸதாம் மஹித போகவிசேஷஸித்யை
மாங்ல்யஸூத்ரமிவ பிப்ரதி கிங்கரத்வம் ||

இங்கு, 'ப்ரஜா:' என்ற சொல்லைக் கருதினால் நாம் அனைவருமே பெண்களுக்குச் சமம் என்பது புலப்படும். உலகத்தில் தகப்பன் தன் பெண்ணை ஒருவனுக்குக் கொடுத்தால், மணம் புரிகிறவன் மகிழ்ச்சியுடன் அவளை ஏற்று அவளைச் சந்தோஷப்படுத்துகிறான். அவள்மூலம் தானும் இன்புறுகிறான். அவளும் அவன் கட்டிய தாலிச் சரட்டை, தன் கணவனால் பல நன்மைகளைப் பெறுவதற்காகத் தன் உடல் இருக்கும்வரையில் காத்துவருகிறாள். அப்படியே ஆசார்யர்கள், பெண்போல் பரதந்திரர்களான ஜீவர்களைப் பகவானிடத்தில் ஸமர்ப்பிக்கிறார்கள். இந்தச் சரணாகதர்களைப் பகவான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறான். அவர்கள் உன்னைப் பரிபூர்ணமாக அநுபவிக்கிறார்கள். சரீரம் விடும் வரையும், இவர்களும் பதிவிரதைகள் ஆனபடியால், மங்களச் சரட்டைப் பக்தியுடன் காப்பாற்றுவது போல் பாகவத பகவத் கைங்கர்யத்தை ச்ரத்தையுடன் செய்து வருகிறார்கள். மாங்கல்யச் சரட்டுக்குச் சமமானது இந்தக் கைங்கர்யம். ஆகையால் ஆசார்யன் மூலமாகப் பகவானிடத்தில் செய்யப்படும் ஆத்ம ஸமர்ப்பணமே கன்னிகாதானம். இதைத்தான் பல விவாக இடங்களில் சென்று, அங்குச் செய்யக் கூடிய காரியங்களை நன்கு ஆலோசித்து உணர்ந்துகொள்ள வேண்டும். நாம் லோகத்தில் விவாகத்துக்குச் சென்றதும் நல்ல சாப்பாடு கிடைக்கிறது; சில லெளகிக விளையாட்டுக் கச்சேரிகள் நடக்கின்றன; நமக்கு நல்ல வெகுமதி கிடைக்கிறது என்ற இப் புடைகளில் மனத்தைச் செலுத்தாமல் உபாத்தியாயர் மந்த்ரத்தைச் சொல்லிக் கொடுத்தவுடன் அதைக் கற்றுப் பிதா தன் பெண்ணை விஷ்ணுவான வரனுக்குக் கொடுப்பதை நன்கு பராமரிசித்து விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

Swami speaks about Dharma, various types of Dhaanam and especially the fruits of Kannika Dhanam....