|
|
|
|
பத்தும் மூன்றும் ஒன்றும்
ச்ரிய:
பதியான நாராயணன் ஸாதுக்களைக்
காக்கவும் துஷ்டர்களை
அழிக்கவும் தர்மத்தை
நிலைநிறுத்தவும் இப்
புவியில் அவதரிக்கிறான்
என்பது ஆஸ்திகர்களின்
கொள்கை. இதைத்தான் 'பரித்ராணாய
ஸாதுதூநாம்' என்ற ச்லோகத்தில்
அர்ஜுனனைக் குறித்துக்
கீதாசார்யன் கூறியது.
ஸ்ரீமத் பாகவதத்திலும்
இதையே சுகப்பிரம்மம்
வத்ஸா பஹார கட்டத்தில்
நான் முகன் வாயிலாகக்
கூறியிருக்கிறார் -
ஸுரேஷு,
ரிஷிஷு, ஈச! ததைவ ந்ருஷ்வபி திர்யக்ஷு
யாதஸ்வபி தே அஜநஸ்ய | ஜந்ம
அஸதாம் துர்மதநிக்ரஹாய
ச, ப்ரபோ ! விதாத : ஸதநுக்ரஹாய
ச || (10-14-20)
"ஸர்வேச்வரனே! நீ
பிறப்பற்றவன். ஆயினும்
புண்ணிய பாவ வினைகளை
அநுஸரித்து நாங்கள் எப்படி
இந்த பூமியில் பிறக்கிறோமோ
அதுபோல் கர்மஸம்பந்தம்
அற்றிருந்தும் நீ இச்சையினால்
இந்த உலகத்தில் தேவகுலத்திலும்,
ரிஷி குலத்திலும், மனுஷ்ய
குலத்திலும், திர்யக்
ஜாதி முதலியவற்றிலும்
பிறப்பை எடுத்துக் கொள்கிறாய்.
இது எதற்கென்றால், அஸத்
புருஷர்களின் கொழுப்பை
அடக்குவதற்கும், ஸத்துக்களை
அநுக்ரகிப்பதற்கும்தான்"
என்று பிரம்மா கண்ணனைக்
குறித்துக் கூறுவதாக
இந்த ச்லோகம் அமைந்துள்ளது.
இந்த
கருத்தையே ஸ்ரீமத்ராமாயணத்தில்
வால்கீகி பகவான் கூறுகிறார்
-
ஸ ஹி தேவைருதீரணஸ்ய
ராவணஸ்ய வதார்த்திபி:
| அர்த்திதோ மாநுஷே லோகே
ஜஜ்ஞே விஷ்ணுஸ் ஸநாதந:
||
"துஷ்டனான ராவணனின்
வதத்தை விரும்பிய தேவர்களினால்
பிரார்த்திக்கப்பட்டு,
ஸநாதனனான (நித்தியனான)
விஷ்ணு, இந்தக் கர்மபூமியில்
ராமனாகப் பிறந்தான்"
என்பது இதன் கருத்து.
இந்தக்
கர்மபூமியை 'இருள்தரு
மாஞாலம்' என்பர். இதில்
பிறப்பவர்களையும் வசிப்பவர்களையும்
அஞ்ஞானமாகிய இருட்டுச்
சூழ்ந்துகொண்டு ஸத்விஷயங்களை
அறிய விடாமல், பலவிதத்
துன்பங்களைக் கொடுக்க
ஹேதுவாகிறது. மேலும்,
இந்த உடல் மாம்ஸம், பூயம்,
சோணிதம், விட், மூத்திரம்
முதலியவை நிறைந்து அருவருப்பைக்
கொடுக்கக்கூடியதாக
அமைந்திருக்கிறது. ஆகையால்தான்
நாம் வேள்வி முதலியவற்றைச்
செய்யும்போது, அக்னியில்
நாம் சமர்ப்பித்த ஹவிஸ்ஸை,
நாம் சொன்ன மந்திரங்களுக்குக்
கட்டுப்ட்டு வந்து, தேவதைகள்
இந்தப் பூமியில் கால்களை
வைக்காமல், ஒரு முழம்
உயரத்தில் இருந்துகொண்டு,
மூக்கின் வாயிலாக இந்தப்
பூமியின் வாஸனை உட்புகாமல்
இருக்க த்ருடமாகப் பிராணாயாமம்
செய்துகொண்டு பெற்றுக்
கொள்ளுகிறார்களாம்.
அப்படிப்பட்ட மனுஷ்யலோகத்தில்
அந்தத் தேவதைகளுக்கும்
மேம்பட்டவனும் அகர்மவச்யனுமான
ஸ்ரீமகாவிஷ்ணு ஸ்ரீராமனாகப்
பிறந்தான் என்றால் அவனுடைய
ஸெளலப்ய ஸெளசீல்ய வாத்ஸல்யாதி
திருக்கல்யாண குணகணங்களின்
பெருமையை என்னவென்று
சொல்வது? ராவணனுடைய
வதத்துக்காகவும், தேவதைகளின்
பிரார்த்தனைக்காகவும்
அவதரித்தான் என்றதனால்
துஷ்ட நிக்ரஹமும் சிஷ்டபரிபாலனமும்
சொல்லப்பட்டன.
இவ்வாறு
சிஷடபரிபாலனத்துக்காகவும்,
துஷ்ட ராவணநிக்ரஹத்துக்காகவுமே
ராமனாகப் பிறந்தபடியால்
தகப்பனாக தசரத சக்ரவர்த்தி
பட்டாபிஷேகம் செய்ய உத்தேசித்த
ஸமயத்தில், அவனுக்காகவும்
உலகத்தாருக்காகவும்
வேர்களின் எதிரில் ஒப்புக்கொண்டு,
ஸ்ரீரங்கநாதனை ராமன்
வணங்கியபோது, தகப்பன்
விரும்பிய பட்டாபிஷேகத்தை
வேண்டிக்கொள்ளாமல்
தன் விருப்பத்தையே வேண்டினான்
-
மஹதே தைவதாய ஆஜ்யம்
ஜுஹாவ ஜ்வலிதே அநலே | சேஷம்
ச ஹவிஷஸ் தஸ்ய ப்ராஸ்யாஸ்யா
த்மந: ப்ரியம் ||
"நன்கு
ஜ்வலிக்கிற அக்கினியில்
பகவானை உத்தேசித்து ஹவிஸ்ஸை
ஸமர்ப்பித்து, மீதியை
அமுது செய்து, தன் மனோரதப்படி
காரியம் நடைபெற வேண்டும்
என்று வேண்டிக் கொண்டான்."
இதில் தகப்பனான தசரதனுடைய
மனோபீஷ்டமான காரியம்
நடைபெற வேண்டிக்கொள்ள
வில்லை. தனக்கு இஷ்டமான
பட்டாபிஷேகத்தின் தடங்கலையும்
காட்டுக்குச் செல்வதையுமே
வேண்டிக்கொண்டான். காட்டுக்கு
சென்று தேவதைகளின் விருப்பப்படி
ராவணனை ஸம்ஹரிப்பதற்காக
அன்றோ அவன் அவதரித்தது?
மேலும்,
ஸ்ரீராமன், பட்டாபிஷேக
தினத்துக்கு முன்னிரவில்
ஸீதையுடன் பர்யங்கத்தில்
உபவாஸத்துடன் உட்கார்ந்து,
பல மகரிஷிகளுடனும் ஸந்யாஸிகளுடனும்
புண்ணிய கதைகளைச் சொல்லிக்
கொண்டும் கேட்டுக் கொண்டும்
தூங்காமல் விரதத்துடன்
இருந்தான். அப்பொழுது
ஸீதாபிராட்டி, "நாதா! நீர்
உம்முடைய தகப்பனார் சொற்படி
பட்டாபிஷேகத்துக்கு
ஸந்நத்தமான காரியங்களைச்
செய்துகொண்டு ஸுகமாக
வாழலாம் என்று இருக்கிறீரே.
தேவதைகளின் பிரார்த்தனை
என்ன ஆயிற்று? நீர் அவர்களுக்குக்
கொடுத்த வரம் வீணாக
வேண்டியதுதானா?" என்று
சில இங்கிதங்களையிட்டுத்
தெரியப்படுத்தினாள்.
அதைக் கேட்ட ராமன், "அடி
பைத்தியமே! இவ்வளவு பழகியும்
என்னை நீ அறிந்து கொண்டது
இதுதானா! ஏன் அவசரப்படுகிறாய்?
சற்றுப் பொறு. நான் 'வரதன்'
அல்லனோ? ஸுமந்த்ரர்
வந்துவிடுவார். நம் காரியம்
செவ்வனே நடக்கும்" என்று
சொன்னான். இப்படிச்
சொல்லிக் கொண்டிருந்தபோதே
ஸுமந்த்ரர் அங்கு வந்து
ஸ்ரீராமனை ஸேவித்தார்.
அங்குள்ள ச்லோகம் இது
-
தம் தபந்தபிவாதித்யம்
உபபந்நம் ஸ்வதேஜஸா | வவந்தே
வரதம் வந்தீ விநயஜ்ஞோ
விநீதவத் ||
இங்கு 'வரதம்'
என்று வால்மீகியின் பதவிந்யாஸத்தின்
சுவையை ரஸிக்க வேண்டும்.
இவ்வாறு
ஸுமந்த்ரர் மூலமாகக்
கைகேயியின் அரண்மனைக்குச்
சென்று, ராமன் தன் தகப்பனார்
கவலையுடன் இருப்பதையும்
கண்டு, கூற்றுத்தாய்
சொற்படிதான் காட்டுக்குப்
போகத் தீர்மானித்துக்
கொண்டான். உடனே தன் தாயிடம்
சென்று ஸமாதானம் சொல்லிவிட்டு,
ஸீதையிடமும் விஷயத்தைச்
சொல்லிச் சில தர்மங்களையும்
உபதேசம் செய்து, "நீ அயோத்தியில்
இன்ன இன்ன மாதிரி இரு.
நான் காட்டுக்குப் போய்
வருகிறேன்" என்று கூறினான்.
இதைக் கேட்ட ஸீதை, தானும்
ஸ்ரீராமனுடன் காட்டுக்கு
வரச் சில தர்மங்களைச்
சொல்லிக் கடைசியில்
ஒரு ரஸகனமான விஷயத்தைக்
கூறுகிறாள். அதை உணர்த்தும்
ச்லோகம் இது:-
இமம் ஹ
ஸஹிதும் சோகம் முஹுர்த்தமபி
நோத்ஸஹே | கிம் புநர்
தச வர்ஷாணி த்ரீணி சைகம்
ச து:கிதா ||
"நாரதரே ! ஸுமந்த்ரர்
இங்கு வந்து உம்மை அழைத்துச்
சென்றார். பிறகு முஹுர்த்த
காலத்தில் இங்கு நீர்
வந்து விட்டீர். இந்த
முஹுர்த்த காலம் உம்மை
விட்டுப் பிரிந்திருந்ததையே
என்னால் தாங்க முடியவில்லை.
அப்படியிருக்க, உம்மை
விட்டுப் பிரிந்து பதினான்கு
வருஷ காலம் எப்படி உயிருடன்
இருப்பேன்?" என்று ஸீதை
சொன்னாள்.
உலகத்தில்,
காதலனிடத்தில் அதிக அன்புள்ள
காதலிக்கு அவனை க்ஷணகாலம்
விட்டுப் பிரிந்திருந்தாலும்
அது ஒரு யுகம் பிரிந்திருந்தாற்
போல் தோற்றும்; அளவற்ற
துயரத்தைத் தரும். உடம்பில்
பல மாறுதல்களும் ஏற்படும்.
ஒருவருக்கொருவர் தம்பதிகள்
த்ருடாலிங்கனம் செய்துகொண்டு
இருக்கும் ஸமயத்திலேயே
ஒரு க்ஷண காலம் ஆலிங்கன
சைதில்யம் ஏற்பட்டால்
அதுவே தாங்க முடியாத
துன்பத்தைத் தருமாம்.
"புல்லிக் கடந்தேன் புடைபெயர்ந்தேன்
அவ்வளவில் அற்றிக் கொள்
வற்றே பசப்பு" என்று திருவள்ளுவரும்
சொன்னார். அப்படியிருக்க,
விட்டுப் விரிந்தால்
உடலில் வைவர்ண்யத்தைச்
சொல்ல வேண்டுமா? அதிக
காலம் பிரிவு ஏற்பட்டால்
உயிருக்கே ஆபத்து வந்துவிடாதா?
இது உலக இயற்கை. அந்த நிலையிலுள்ள
ஸீதாபிராட்டி, 'ஸ்ரீராமனுடைய
பிரிவு தாங்க முடியாதது'
என்று வெளிப்படுத்தித்
தன்னையும காட்டுக்கு
அழைத்து செல்ல வேண்டுகிறாள்.
இங்கு,
கைகேயி, ஸ்ரீராமன் பதினான்கு
வருஷகாலம் காட்டில் வசிக்க
வேண்டும் என்று வேண்டிக்
கொண்டாள். இந்தக் காலத்தை
ஸ்ரீமத் ராமாயணத்தில்
குறிக்கும்போது அப்படியே
'பதினான்கு' என்றும், 'ஏழு
ஏழு' என்றும், 'ஒன்பது ஐந்து'
என்றும் பல பிரகாரமாக
எண்ணிக்கை நிர்தேசம்
பண்ணப்பட்டுள்ளது. இப்படிக்
குறிப்பதற்குப் பல விசேஷங்கள்
உண்டு என்பது ஆராய்ந்தால்
தெரியும்.
அதைப் பற்றிய
விரிவை மற்றொரு சமயத்தில்
எழுதுவோம். இவ்விடத்தில்
கீழ்க் கூறிய வகையில்,
'ஏழு ஏழு', 'ஒன்பது ஐந்து',
'பதினான்கு' என்று கூறாமல்,
'பத்து மூன்று ஒன்று' என்ற
வகையில் கூறியதன் கருத்து
என்ன என்பதை ஆராய்வோம்.
வால்மீகி
பகவானுக்கு, இம்மாதிரி
சொல்லாமல் பதினான்கை
குறிப்பதற்கு வேறு பதங்களைப்
பிரயோகித்து ச்லோகத்தை
அமைக்கத் தெரியாதா? இவருடைய
ஒவ்வொரு சொல்லிலும்
அர்த்தபுஷ்டி உண்டு.
ஸாதாரணமாக 'ச' என்னும்
சொல்லைக்கூட வீணாக பிரயோகிக்க
மாட்டார். 'சகாரகுக்ஷி'
என்று வ்யாஸரைச் சொல்லலாம்.
'பீஷ்மம் ச த்ரோணம் ச
ஜயத்ரதம் ச' என்று அர்த்தமில்லாமல்
ச்லோகத்தை நிரப்பிப்
பிரயோகிப்பார் என்பது
லோகப் பிரஸித்தம். அப்படிப்பட்டவரல்லர்
ஸ்ரீமத் ராமாயண காவ்யகர்த்தாவான
வால்மீகி முனிவர். 'தர்மஜ்ஞஸ்
ச க்ருதஜ்ஞஸ்ச', 'வித்வாந்
க: கஸ் ஸமர்த்தஸ் ச கஸ்சைகப்ரிய
தர்சந:' என்று காவ்ய ஆரம்பத்திலேயே
அநேக 'ச' காரப் பிரயோகம்
பண்ணியிருக்கிறாரே என்று
நினைக்க வேண்டாம். 'பதினாறு
குணங்களுடன கூடிய உத்தம
புருஷன் யார்? என்ற கேள்விக்குக்
கருத்து என்னவென்றால்,
முப்பத்திரண்டு குணங்களுடன்
கூடிய உத்தம புருஷன்
யார் என்பதில் நோக்கம்.
அதற்காகத்தான் 'உம்மை'
யைச் சொல்லக்கூடிய சொல்லை
(ச என்பதை)ப் பல தடவை பிரயோகம்
செய்தார்.
'தர்மஜ்ஞஸ்
ச - தர்மத்தை அறிந்தவன்',
'ச' என்பதனால் அதர்மத்தையும்
அறிந்தவன் என்று காட்டுகிறார்.
உலகத்தில் தர்மம், அதர்மம்
ஆகிய இரண்டையும் செய்வதற்காகவும்
விடுவதற்காகவும் அறிந்துகொள்ள
வேண்டும் அல்லவா? 'க்ருதஜ்ஞஸ்
ச-நாம் செய்யும் உபகாரத்தை
அறிந்து கொள்பவன்.' ச
என்பதனால், நாம் செய்யும்
அபகாரத்தை மனத்திலும்
நினைக்காதவன் என்று பொருள்.
'ந ஸ்மரத்யபகாரணாம் சதமப்யாத்மவத்தயா
| கதஞ்சிதுபகாரேண க்ருதேநைகேந
துஷ்யதி' என்றல்லவொ
ராமனுடைய குணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன?
ஸமர்த்தஸ் ச-சத்ருக்களிடத்தில்
தன் வலிமையைக் காட்டுவான்.
ஸத்புருஷரிடத்தில் தன்
வலிமையைக் காட்டமாட்டான்.
ராமம் ஸத்யபராக்ரமம்.
த்வேஷிகளிடத்தில் ஸத்தியமான
பராக்கிரமத்தை உடையவன்.
ஸதி அபராக்ரமம் - ஆச்ரிதரிடத்தில்
பராக்கிரமத்தைக் காட்டாதவன்.
இப்படி ஒவ்வோர் இடத்திலும்
'ச' என்பதன் விசேஷார்த்தத்தைக்
கண்டுகொள்ள வேண்டும்.
ஆக, வால்மீகியின் ஒவ்வொரு
பத அமைப்புக்கும் விசேஷார்த்தங்களை
ஆராய்ந்து ரஸிக்க வேண்டும்.
எனவே,
இங்கு, 'பத்து மூன்று ஒன்று'
என்று பதினான்கு வருஷத்தைக்
குறிப்பதற்கும் காரணம்
இருக்கவேண்டும். ஸ்ரீராமன்
ஸீதையைவிட்டு தனியாக
காட்டுக்கு செல்வதாகச்
சொன்னதும் ஸீதை இப்படி
கூறி, "நீர் தனியாக போகக்
கூடாது, என்னையும் அழைத்துப்
போகவேண்டும்" என்று
மேல் நடக்கவேண்டிய விஷயங்களை
நினைவு மூட்டுவதற்காக
இதைத் தெரிவிக்கிறாள்.
அதாவது "நாம் வைகுண்ட
லோகத்தில் இருக்கும்போது
தேவதைகள் ராவணனுக்கு
பயந்து சரணாகதி செய்தார்களே;
அப்போது மனத்தில் ஒரு
ஏற்பாடு செய்துகொண்டோம்.
தசரதச் சக்ரவர்த்திக்கு
நீர் புத்திரனாகப் பிறக்கவேண்டும்;
நான் ஜனகரின் யஜ்ஞ சாலையில்
பிறக்கவேண்டும். நமக்கு
விவாகம் ஆனதும் பட்டாபிஷேக
சமயத்தில் அதன் தடங்கல்களை
ஏற்படுத்திக்கொண்டு
காட்டுக்கு செல்ல வேண்டும்;
அங்கே பதிநான்கு வருஷம்
தங்கவேண்டும். ரிஷிகளின்
ஆச்ரமங்களிலேயே ஆறு மாஸம்,
எட்டு மாஸம், ஒரு வருஷம்
என்ற கணக்கில் பத்து
வருஷங்களைக் கழிக்கவேண்டும்.
பிறகு பஞ்சவடியில் மூன்று
வருஷங்களைப் போக்கவேண்டும்.
பின்பு நான் ராவணனுடைய
சிறையில் (அசோக வனத்தில்)
ஒரு வருஷம் மிக்கத் துன்பத்துடன்
உமது பிரிவை சகிக்க முடியாமல்
இருக்க வேண்டும். இதன்
மூலம் ராவண வதம் செய்ய
வேண்டும் என்றல்லவா ஏற்பாடு
செய்து கொண்டோம்? அதன்படி
நடக்க நான் இல்லாமல்
நீர் மாத்திரம் காட்டிற்குச்
சென்றால் என்ன செய்ய
முடியும்?" என்பதை நினைவூட்டவே
இவ்விதம் சொன்னாள்.
உலகத்திலும் பெரிய பதவியில்
உள்ளவர்கள் வெளிநாட்டுக்கு
செல்வதாக இருந்தால்,
'இன்ன இன்ன இடங்களில்
தங்கவேண்டும்; இன்ன இன்னதைச்
செய்யவேண்டும்' என்று
காரிய க்ரமங்களை ஏற்பாடு
செய்து கொண்டு புறப்படுவது
வழக்கம். அதுபோல இந்த
திவ்ய தம்பதிகளும் முன்பே
இப்படி ஏற்பாடு செய்துகொண்டார்கள்.
இதன்படியே காட்டுக்குச்
சென்றதும் அந்த அந்த
ஆச்ரமங்களில் பத்து வருஷ
காலத்தை கழித்தனர். பிறகு
பஞ்சவடியில் மூன்று வருஷ
காலம்; அசோக வனத்தில்
ஸீதை மட்டும் ஒரு வருஷம்.
'ஏகம் ச து: கிதா' என்று சொன்னதிலிருந்தும்
இது ஸ்பஷ்டமாகிறது. பதிநான்கு
வருஷங்களில் பதிமூன்று
வருஷங்களில் பிரிவேஇல்லை.
அப்போது துக்கத்திற்கு
பிரஸக்தியே இல்லை. ஒரு
வருஷ காலமே பிரிவு. ஆதனால்
ஒரு வருக்ஷமே துக்கம்.
இதைக் காட்டவே, 'ஏகம் ச
து: கிதா' என்று சேர்த்து
பிரயோகித்தார் வால்மீகி.
இப்படி விசேஷார்த்தத்தை
மனதில் வைத்துத்தான்
பதிநான்கு என்று சொல்லாமல்
பிரித்துச் சொன்னாள்
ஸீதா பிராட்டி ஸ்ரீராமனிடத்தில்.
இதை அறிந்து கொண்டுதான்
ராமன், "உன்னை விட்டு சொர்க்க
லோகத்திலும் எனக்கு
விருப்பம் இல்லை. என்
குலத்துக்கும் உன் குலத்துக்கும்
தகுந்தாற் போல் நீ பேசியது
பொருத்தமே. உன்னையும்
அழைத்துச் செல்லுகிறேன்
என்று சொன்னான்.
|
|
|
|
|
|
|
|
|
|
|