Perukaranai Madabusi Sriman Chakravarthiyaarya Maha Desikan

The significance of the Piratti's Avataar

Home
God always comes for your rescue !
Dharmam
Kannikaa Dhaanam
The Twenty-four steps !
Like Emberumaan, Thaayaar too takes Avataar
Mouna Vritham
Ten + Three + One
Pushpanjali

Sri Perukaranai Swami throws a light on Avatar !

பிராட்டியின் அவதார விசேஷம்

நாம் நமது தரிசனத்தில் எம்பெருமானுக்கும் பிராட்டிக்கும் ஸமமான முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். இருவரின் சேர்த்தியே நமக்கு மிகத் தஞ்சமாகிறது. இது வேதம், பூர்வாசார்ய ஸ்ரீஸுக்தி முதலிய பிரமாண ஆசார பரம்பரையால் ஏற்பட்ட விஷயம். வெறும் ப்ரஹ்மசாரிப் பெருமாளான நாராயணனும் உபயோகமற்றவர்; எம்பெருமான் ஸம்பந்தமற்ற வெறும் லக்ஷ்மியும் உபயோகமற்றவள். எல்லாக் காலத்திலும் எல்லா நிலைகளிலும் எல்லா இடங்களிலும் மிதுனமான இருவரையும் அடைந்தே நாம் உஜ்ஜீவிக்க வேண்டும். லங்காதிபதியான ராவணன் எல்லா வேதங்களையும் கற்றவன், மகா சூரன், மூன்று உலகங்களையும் பந்தாக்கி ஆடினவன், கைலாச மலையை அசைத்தவன். அப்படிப்பட்டவன் மகாவிஷ்ணுவின் அவதாரமான சக்கரவர்த்தி திருமகனான ஸ்ரீராமனை உபேக்ஷித்துச் சீதையை (லக்ஷ்மியை) மாத்திரம் பற்றினான்; பல அனர்த்தங்களுக்கு ஆளானான். ராவணன் தங்கையான சூர்ப்பணகை மகா லக்ஷ்மியின்அவதாரமான சீதாதேவியை அநாதரித்து ராமனை மாத்திரம் பற்றினாள்; பல அனர்த்தங்களையும் பெற்றாள். ஆகையால் இந்த மிதுனத்தில் ஒருவரை அநாதரித்து ஒருவரை மாத்திரம் அடைந்தால் ராவணன்-சூர்ப்பணகை கதிதான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த விஷயத்தை மனத்தில் வைத்துக் கொண்டுதான் வேதாந்த ஆசிரியர், 'தைவதம் தம்பதீ ந:' என்று சுருங்க அருளிச் செய்தார்.

இப்படி இந்த மிதுனம் நமக்கு உத்தேச்யமானபடியாலும், இருவரும் சேர்ந்தே நமக்கு எல்லாவித அநிஷ்டங்களைப் போக்கி இஷ்டங்களைக் கொடுக்கிறபடியாலும் எம்பெருமான் இவ்வுலகத்தில் எந்த எந்த அவதாரம் எடுத்தாலும் மகா லக்ஷ்மியும் அதற்குத் தகுந்தாற் போல் அவதாரமெடுத்து நமக்கு அருள்புரிகிறாள்.

ஸத்காரியங்களைச் செய்த மகான்களுக்கு அருள்புரிந்து பகவான் சொர்க்கம், தனம், ஐச்வரியம் முதலிய நன்மைகளைச் செய்ய நினைத்து மகாலக்ஷ்மியின் முகத்தைப் பார்த்து அவளுடைய இங்கிதங்களை உணர்ந்து அதற்குப் பராதீனனாக இருந்து அளிக்கிறான் என்று பெரியோர் பணிப்பர். இப்படி அவனுடைய முகஜாடையை அறிந்து செய்வதனால்தான் இருவருக்கும் ஐகரஸ்யம் ஏற்படுகிறது; சுவை பெருகுகிறது; அவர்களின் வியாபாரம் ரஸவத்தாக முடிகிறது. எனவே அவன் அவதாரம் செய்யும்போது இவளும் அவதரித்து, உலகரீதியில் சில வியாபாரங்களைச் செய்து ஆனந்தத்தை அடைகிறார்கள்.

கூரத்தாழ்வானின் குமாரரான ஸ்ரீபராசரபட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் ஸ்ரீரங்கநாதனைப் பார்த்து ஒரு ச்லோகம் அருளிச் செய்கிறார் -

அநுஜ நுர நுரூப ரூப சேஷ்டா
ந யதி ஸமாகம மிந்திராகரிஷ்யத் |
அஸரஸமதவா அப்ரியம்பவிஷ்ணு
த்ருவமகரிஷ்யத ரங்கராஜ! நர்ம || (உத்தர சதகம் 49)

இதன் கருத்து - ரங்கநாதரே, உமது பத்தினியான பிராட்டி உம்முடைய அவதாரம்தோறும் உமக்கு ஒத்த உருவத்தையும் லீலைகளையும் உடையவளாக, உம்முடன் அவதாரத்தை செய்யாமல் இருந்தானானால், உம்முடைய விலாஸமும் சேஷ்டையும் சுவையற்றனவாகவே ஆகிவிடும், அல்லது வெறுக்கத்தக்கனவாகவே முடியும். இது நிச்சயம். ஆகையால் உம்முடைய திருமேனிக்கும் விளையாடல்களுக்கும் ஏற்ற திருமேனியையும் விளையாடல்களையும் கொண்டு உம்முடன் அவதாரம் செய்கிறபடியால் உம்முடைய அவதாரங்கள் இனிமை பெறுகின்றன. அவள் அவதாரம் செய்யாவிட்டால் நீர் ப்ரஹ்மசாரி நாராயணன் ஆனபடியால் உம்முடைய வியாபாரங்கள் உலகத்தில் பரிமளிக்கவே மாட்டா என்றபடி.

இதே ஆசார்யர், ஸ்ரீகுணரத்ந கோசத்தில் (48) ஸ்ரீரங்கநாயகியைப் பார்த்து இதே கருத்துள்ள ஒரு ச்லோக ரத்னத்தை அருளிச் செய்கிறார் -

யதி மநுஜதிரஸ்சாம் லீலயா துல்யவ்ருத்தே -
ரநு ஜநுரநுரூபா தேவி ! நாவாதரிஷ்ய : |
அஸரஸமபவிஷ்யந் நர்ம நாதஸ்ய மாத :|
தரதலதரவிந்தோ தந்த காந்தாயதாக்ஷி ||

இதன் கருத்து - மகாலக்ஷ்மியே ! உன் நாதரான பகவான் மனிதனாகப் பிறந்தாலும் திர்யக் சரீரம் எடுத்தாலும், தேவ சரீரம் எடுத்தாலும் நீயும் அதற்குத் தகுந்தாற்போல் அந்த அந்தச் சரீரத்தை எடுத்து அவருடன் கலந்து பரிமாறி ஜனங்களுக்கு நற்காரியங்களை உண்டு பண்ணுகிறாய். அப்படி அந்த எம்பெருமானுக்குத் தகுந்தாற்போல் நீ சரீரபரிக்ரகம் பண்ணாமலிருந்தாயானால் அவருடைய வியாபாரமேல்லாம் ரஸவத்தாக ஆகவே ஆகாது; சுவையற்றதாகவே முடியும் என்றபடி.

இந்தக் கருத்தையே ஸ்வாமி வேதாந்த தேசிகனும் ஸ்ரீஸ்துதியில் (10) மிகவும் ரஸமாக அருளிச்செய்கிறார் -

ஆபந்நார்த்திப்ரசமநவிதெள பத்ததீக்ஷஸ்ய விஷ்ணோ;.
ஆசக்யுஸ் த்வாம் ப்ரியஸஹசரீமைகமத்யோபபந்நாம் |
ப்ராதுர்பாவைரபி ஸம தநு: ப்ராத்வமந்வீயஸே த்வம்
தூரோத்க்ஷிப்தைரிவ மதுரதா துக்தராசேஸ் தரங்கை: ||

"பெரிய பிராட்டியே ! உலகத்தில் துன்பமடைந்த பக்தனின் துன்பத்தைப் போக்க வேண்டுமென்ற ஸங்கல்பம் கொண்டுள்ளான் உன் கணவன். இது அவனுக்கு ஒரு யாகம் போலும். யாகம் செய்யும்போது அருகில் மனைவி இருக்க வேண்டும். இப்படி இல்லாதவன் வேள்வி செய்வதற்கே அதிகாரமற்றவன் ஆகிறான். ஆகையால் நீயும் அவனுடன் இருந்து அவனுக்குத் துணைவியாக நின்று இந்த வேள்வியை நடத்துகிறாய். எனவே அவன் ராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களை எடுக்கும்போதேல்லாம் நீயும் அவனுக்குத் தகுந்தவாறு சீதை, ருக்மிணி என்ற அவதாரம் எடுத்து உதவுகிறாய்.

இதற்கு அடுத்த ச்லோகத்தையும் கவனிக்க வேண்டும். ஸ்ரீவைகுண்டலோகத்தில் பரரூபம் என்ற திருமேனியைப் பகவான் அடைந்திருக்கிறான். அதிலிருந்துதான் எல்லா அவதாரத் திருமேனிகளும் உண்டாகின்றன. இதுதான் முதற் காரணமான திருமேனி. அப்படியே மகாலக்ஷ்மிக்கும் பரரூபம் என்ற திருமேனி உண்டு. அந்தத் திருமேனியிலிருந்து சீதை, ருக்மிணி முதலிய திருமேனிகள் தோன்றுகின்றன. இது இந்த அவதாரங்களுக்கு முதற் காரணமாகிறது. இப்படி அவதரித்து அந்த அந்தக் காரியங்களைச் செய்தபிறகு பரரூபம் என்னும் திருமேனியிலேயே அவதாரங்கள் மறைகின்றன. சமுத்திரத்தில் காற்றின் வேகத்தினால் அலைகள் தோன்றுவதும் மறைவதுமாக இருப்பது போல் இது இருக்கிறது என்று இந்த ஆசிரியர் கூறுகிறார்.

இப்படி ஆசார்யர்கள் கூறுவது பிரமாணமின்றி இல்லை. விஷ்ணுபுராணத்தில் மகாலக்ஷ்மியைத் தேவேந்திரன் முதலியோர் ஸ்தோத்ரம் செய்யும்போது உள்ள ச்லோகங்களைக் கவனிக்க வேண்டும்.

ஏவம் யதா ஜகத் ஸ்வாமீ தேவதேவோ ஜநார்தன:|
அவதாரம் கரோத்யேஷா ததா ஸ்ரீஸ் தத்ஸஹாயிநீ||
ராகவத்வே அபவத் ஸீதா ருக்மிணீ க்ருஷ்ண ஜந்மநி |
அந்யேஷு சாவதாரேஷு விஷ்ணோரேஷா ஸஹாயிநீ|
தேவத்வே தேவதேஹேயம் மநுஷ்யத்வே ச மாநுஷீ ||
விஷ்ணோர்தேஹாநுரூபாம் வை கரோத்யேஷாத்மநஸ் தநும் ||
[ 1-9-140, 142, 143 ]

இப்படி எம்பெருமான் அவதரிக்கும்போதெல்லாம் பெரிய பிராட்டியும் அதற்குத் தகுந்தாற்போல் அவதாரங்களை எடுத்துக் கொள்கிறாள் என்பது புராணம், வேதம், ஆசார்ய ஸ்ரீஸுக்தி முதலியவற்றினால் ஸித்தமாயிற்று. பகவான் பிரசித்தமாகப் பத்து அவதாரங்களை எடுத்துக் கொள்கிறான். அதில் நரம் கலந்த சிங்கம் என்ற ஓர் அவதாரம் உண்டு. இது எல்லாருக்கும் தெரியும். இந்த அவதாரத்தில் மகாலக்ஷ்மி பெண்சிங்கமாக ஓர் அவதாரம் எடுத்ததாக தெரியவில்லை. எம்பெருமான் ஒவ்வொரு அவதாரத்திலும் அதற்கு தகுந்தவாறு பிராட்டியும் அவதாரம் எடுக்கிறாள் என்பது இந்த அவதாரத்தில் எப்படிப் பொருந்தும்?' என்ற ஐயம் ஏற்படலாம்.

புராணங்களிலும், இராம கிருஷ்ணாதி அவதாரங்களில் ஸீதா ருக்மிணி அவதாரம் போல் ந்ருஸிம்ஹ அவதாரத்தில் பிராட்டியின் அவதாரம் தனிப்பட்டுச் சொல்லப் பெறவில்லை. ஆயினும் ஏதாவது ஒரு வழி உண்டா என்றால் உண்டு. இந்த ஐயத்தை நம் வேதாந்தாசார்யர் தவிர வேறு யாரால்தான் நீக்க முடியும்?

ஸ்ரீஸ்வாமியின் பாதுகாஸஹஸ்ரத்தை (846) நன்கு கவனிக்க வேண்டும் அதிலுள்ள ஒரு ச்லோகத்தை இங்கே குறிப்பிடுகிறேன்.

முக்தாம்சுகேஸரவதீ ஸ்திரவஜ்ரதம்ஷ்ட்ரா
ப்ரஹ்லாத ஸம்பதநுரூபஹிரண்ய பேதா |
மூர்த்தி : ச்ரியோ பவஸி மாதவபாதரக்ஷே
நாதஸ்ய நூநமுசிதா நரஸிம்ஹமூர்த்தே : ||

பகவான் ந்ருஸிம்ஹனாக அவதரித்தபோது பிராட்டி பாதுகையாக அவதரித்தாளாம். ஆகையால் அந்த அவதாரத்தில் மகாலக்ஷ்மியின் அவதாரம் இல்லை என்று சொல்ல முடியாது. இராம கிருஷ்ணாதி அவதாரங்களில் ஸீதா ருக்மிணி என்ற தகுந்த அவதாரங்களை போல் இந்த ந்ருஸிம்ஹ அவதாரத்தில் பிராட்டி பாதுகையாக அவதரித்தாலும் பெண்சிங்கமாக அவதரிக்கவில்லையே என்று சந்தேகப்பட வேண்டாம். பாதுகையே பெண் சிங்கம். சிங்கத்துக்குப் பிடரிமயிரும் கோரப் பற்களும் உண்டே. பிராட்டி அவதாரமான பாதுகையான பெண் சிங்கத்துக்கு இவை உண்டா என்றால், உண்டு என்கிறார். ரூபக முறையிலும் ச்லேஷமுறையிலும் பாதுகையைப் பெண்சிங்கமாக்கி வர்ணிப்பது ஸ்வாமியின் கைவந்த கலை; மிகவும் சாதுரியமானது. பாதுகை தங்கக் கவசம் அணிந்துள்ளது அதில் முத்துக்கள் பதிந்திருக்கின்றன. கெட்டியான வைரக் கற்களால் அலங்கரிக்கப் பெற்றிருக்கிறது. அதில் முத்துக்களின் ஒளி நான்கு பக்கமும் பளபளவென்று வீசுகிறது. அது பிடரிமயிரை ஒத்திருக்கிறது. பாதுகையான பெண்சிங்கத்துக்குப் பிடரிமயிர் ஏற்பட்டுவிட்டது. வைரக்கற்கள் கோரப்பற்களை ஒத்திருக்கின்றன. ஆகையால் இந்த சிங்கத்துக்கு கோர பற்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆண் சிங்கமான நரசிங்கம் பக்திமானான ப்ரஹ்லாதனுடைய பக்திச் செல்வத்தை பார்த்து ஹிரண்யகசிபுவை ஸம்ஹாரம் செய்தது. இந்த பெண் சிங்கமும் உயர்ந்த தங்கமயமான கவசத்தைத் தரித்திருப்பதனால் பக்தர்களான நமக்கு ஆனந்த ஸம்பத்தை உண்டு பண்ணுகிறது. ஆகையால் நரம் கலந்த சிங்கமான பகவானுக்கு ஏற்ற பெண்சிங்கமாக ஆகிறது இந்தப் பாதுகை. எனவே ந்ருஸிமஹ அவதாரத்திலும் பிராட்டியின் அவதாரத்துக்கு குறையில்லை என்றார் இந்த ஆசார்யர்.

மேலும், பகவானுடைய ஒவ்வோர் அவதாரத்திலும் பிராட்டி ஒரே அவதாரம் எடுத்து வருகிறாள். கிருஷ்ணனாகப் பிறந்தபோது ஒரே ருக்மிணிதான். ஸ்ரீராமனாகப் பிறந்தபோது ஒரே சீதைதான். இரண்டு ருக்மிணி, இரண்டு சீதை என்பது இல்லை. எனவே ந்ருஸிம்ஹ அவதாரத்திலும் பிராட்டி ஒரே பாதுகையாக அவதாரம் செய்தாள். ஆகவே, இப்போது அஹோபில மடத்தில் மாலோலன் என்ற ந்ருஸிம்ஹன் தன் ஒரே திருவடியில்தான் ஒரே பாதுகையைத் தரித்திருக்கிறான். இது பிராட்டி பாதுகையாகப் பிறந்தாள் என்பதற்கு நற்சாட்சியாகவும் அமைகிறது. ஆகையால், எல்லா அவதாரத்திலும்போல் ந்ருஸிம்ஹ அவதாரத்திலும் பிராட்டியின் அவதாரம் பாதுகையாக உண்டு என்பதைப் பாதுகாஸஹஸ்ரத்தில் ஸ்ரீஸ்வாமி தேசிகன் அழகிய ரீதியில் ரஸகனமாக அருளிச் செய்துள்ளார் என்பதை அநுபவித்தோம்.

*****

Swami's deep knowledge in every subject he deals with is something amazing !