புஷ்பாஞ்ஜலி
நாம் நம்
ஸ்வாமியான இறைவனுக்குத்
திருப்தி ஏற்படும் வகையில்
வேலைகளைச் செய்ய வேண்டும்.
எந்தக் காரியங்களைச்
செய்தால் பகவான் நம்மிடத்தில்
உகப்பை அடைந்து அநுக்ரகம்
செய்வானோ அந்தச் செயல்களில்
இழிவது உத்தமம். அப்படிச்
செய்வதைத்தான் 'கைங்கர்யம்'
என்று பெரியோர் கூறுவர்.
கைங்கர்யம் வேலைக்காரனின்
தொழில். எதைச் செய்தால்
பகவானுடைய திருவுள்ளம்
சீறுமோ அவ்வேலைகளை அறவே
விட்டொழிக்க வேண்டும்.
இங்கு,
'எந்தக் கைங்கர்யம் செய்தால்
பகவான் உகப்பை அடைவான்?
எந்த வேலைகளைச் செய்தால்
பகவானுக்கு கோபம் உண்டாகும்?'
என்றால், இதை நம் புத்தியால்
தீர்மானிக்க முடியாது.
மோக்ஷத்தில் நித்யஸுரிகளும்
முக்தர்களும் ஈச்வரனுடைய
அபிப்பிராயத்தை நேராகவே
அறிந்துகொள்ள முடியும்
ஆகையால் பிரத்யக்ஷத்திலேயே
உணர்ந்து கைங்கர்யங்களைச்
செய்வார்கள். இவ்வுலகத்திலுள்ள
நம்மைப் போன்றவர்களுக்கு
ஸர்வ விஷய ஜ்ஞாநம் இல்லாததால்
ஈச்வரனுடைய அபிப்பிராயத்தை
நேராக அறிந்துகொள்ளச்
சக்தி இல்லை. எனவே, வேதம்
புராணம் தர்மசாஸ்திரம்
முதலியவற்றைக் கற்றறிந்தோ,
கற்றவர் சொல்வதைக் கேட்டோ,
இது நல்லது, இது தீயது
என்று உணர்ந்து, காரியங்களைச்
செய்ய வேண்டும்.
ஓர்
அரசன் உத்யான வனங்களை
ஏற்படுத்திப் பந்து முதலிய
விளையாட்டுக்களை விளையாடுகிறான்.
அதனால் அவன் அங்கு ஏற்படும்
லீலாரஸத்தை அநுபவிக்கிறான்.
அவனே அங்கே, இரு கட்சிகள்
சேர்ந்து விளையாடும்
ஸமயத்தில் அதைப் பார்த்து
ஸந்தோஷிக்கிறான். அதாவது
இரு கட்சிகள் சேர்ந்து
விளையாடும்போது ஒரு
கட்சி வெற்றியடையும்;
மற்றொன்று தோல்வியடையும்
என்பது ஸஹஜம். இதைப்பார்த்து
மத்யஸ்தனான அரசன் ஸந்தோஷித்து
லீலாரஸத்தை அடைகிறான்.
அவ்வரசனே பெரிய மாளிகைகளைக்
கட்டிக் குடும்ப வாழ்க்கையுடன்
இருந்து போக ரஸத்தை
அநுபவிக்கிறான். அது
போலவே ஈச்வரனும் போக
விபூதி, லீலாவிபூதி (போகத்துக்காக
ஏற்பட்ட வைகுண்ட லோகம்
என்ற ஐச்வர்யம், லீலாரஸத்துக்காக
ஏற்பட்ட இவ்வுலகமாகிற
ஐச்வர்யம்) என்ற இரண்டு
லோகங்களை ஏற்படுத்தி,
அவற்றன் மூலமாகப் போகரஸம்,
லீலாரஸம் என்னும் ஆனந்தங்களை
அநுபவிக்கிறான். நாம்
எல்லாரும் எம்பெருமானின்
லீலாரஸத்துக்கு உபகரணமாக
இவ்வுலகில் இருக்கிறோம்.
அதாவது நம்மை வைத்துக்கொண்டு
லீலாரஸத்தை அவன் அநுபவிக்கிறான்.
விளையாடுகிறவனுக்கு
எப்படிப் பந்து அவன்
லீலாரஸத்துக்குக் கருவியாக
ஆகிறதோ, அதையே நாமும்
'ஹரே விஹரசி க்ரீடாகந்துகைரிவ
ஜந்துபி:.' எப்படிப் பந்து
அடிக்கப்பட்டபொழுது
கீழேயும் நடுவிலும் மேலேயும்
செல்லுகிறதோ, அதுபோல
நாமும் நமது புண்ணிய
பாவங்களை அநுசரித்து
நரகத்திலும் பூலோகத்திலும்
ஸ்வர்க்கத்திலும் அவனால்
தள்ளப் பட்டுப் போகிறோம்,
நாம்
நல்ல காரியங்கள், கெட்ட
காரியங்கள் இவற்றில்
எதைச் செய்தாலும் பகவானுடைய
லீலாரஸத்துக்கு உபகரணமாக
ஆகிறோம் என்பதில் ஸந்தேஹமில்லை.
ஆயினும் ஆநுஷங்கிகமாக,
நடுவில், நமக்கு ஸுகம்
துக்கம்' என்பவை உண்டு.
அதாவது கெட்ட காரியங்களைச்
செய்தால் அதனால் பகவான்
கடுஞ் சினம் கொண்டு
நரகத்தில் தள்ளுகிறான்.
அதன் மூலம் நமக்குத்
துக்காநுபவம் ஏற்படும்.
இதைப்பார்த்துப் பகவான்
லீலாரஸத்தை அடைகிறான்.
இப்படி
இம்முகத்தாலே பகவானுக்கு
நாம் லீலாரஸ உபகரணமாகிறோம்.
நற்காரியங்களைச் செய்யும்போது
நமக்கு ஸ்வர்கத்தை கொடுத்து
ஸந்தோஷிப்பித்து அம்
முகத்தாலேயும் அவன் லீலாரஸத்தை
அநுபவிக்கிறான். அந்தப்
பிரகாரத்தாலே நாம் அவனுக்கு
லீலாரஸ உபகரணமாகிறோம்.
ஆகையால் இவ்விரு வகையாலும்
அவனுக்கு நாம் லீலோபகரணமாக
ஆன போதிலும், நமக்கு
நடுவில் ஸுகம் துக்கம்
என்பவை ஏற்படுகின்றனவே.
அவற்றுள் துக்கம் வராமல்
ஸுகம் வருவதற்கு நற்காரியங்களையே
செய்வது உத்தமமாகிறது.
இப்படி
நற்காரியங்களைச் சாஸ்திரங்களைக்
கொண்டு ஆராய்ந்து பார்த்தால்,
எத்தனையோ சொல்லப்பட்டிருக்கின்றன.
அவற்றில் சிறந்தது - புஷ்பங்களைக்
கொண்டு எம்பெருமானை
அர்ச்சித்தல். உலத்திலும்
உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்குக்
கழுத்தில் மாலையணிவித்து
மரியாதை செய்வது, அவர்களுக்குப்
பெருமகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
யாராக இருந்தாலும் கழுத்தில்
மாலையைப் போட்டாலோ,
கையில் புஷ்பங்களைக்
கொடுத்தாலோ உடனே அவர்களுக்கு
மலரைக் கண்டதும் முகத்தில்
மலர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது.
எனவே, புருஷோத்தமனான
எம்பெருமானுக்கும் புஷ்பங்களால்
ஸந்தோஷம் ஏற்படுவது
ஸஹஜமே. பெரியாழ்வார்
திருநந்தவனம் ஏற்படுத்தி
மாலாகாரருடைய கைங்கரியத்தை
செய்யக் கருதிப் பலவிதமாகப்
புஷ்ப கைங்கரியங்களை
செய்தார். தொண்டரடிப்பொடியாழ்வாரும்
அவ்விதமே புஷ்ப கைங்கரியம்
செய்தார். 'தொடையொத்த
துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி
என்னும் அடியனை' என்று
அவர் தாமே அருளிச்செய்தார்.
'தூயோமாய் வந்து நாம்
தூமலர் தூவித் தொழுது'
என்று சூடிக்கொடுத்த
நாச்சியாரும் அருளிச்செய்தார்.
'நெறிமையால் மலர்கள்
தூவிப் பூசனை செய்கின்றார்கள்
புண்ணியம் செய்தவாறே',
'நல்ல புனலொடு மலர்கள்
தூவி எண்ணுமின் எந்தை
'நாமம் இப் பிறப்பறுக்கும்',
'தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்துகொண்டு
ஏத்த வல்லார் அந்தமில்
புகழினாரே' என்று திருவனந்தபுரப்
பாசுரத்தில் நம்மாழ்வார்,
எம்பெருமான் திருநாமங்களைச்
சொல்லிப் புஷ்பங்களைக்
கொண்டு அர்ச்சித்தலை
மிகவும் போற்றியிருக்கிறார்.
இதைக் கொண்டு தான் திவ்ய
தேசங்களிலும் மடங்களிலும்
லக்ஷார்ச்சனை, கோடி
அர்ச்சனை முதலியவற்றை
இப்போதும் செய்து வருகிறார்கள்.
பெரியாழ்வார்,
'பகவானுக்குப் புஷ்பங்களைச்
சூட்டி மகிழ்விப்பதுதான்
பரம புருஷார்த்தம்' என்று
கருதி, 'செண்பகப்பூச்சூட்ட
வாராய்', 'மல்லிகைப் பூச்சூட்ட
வாராய்' என்றெல்லாம்
சொல்லி ஒரு பத்துப்
பாசுரங்கள் பாடியருளினார்.
இங்கே,
'பகவானை அர்ச்சிப்பதற்காக
எடுத்த புஷ்பங்களில்
எவை கூடும்? எவை கூடா?' எனில்,
எல்லாம் பகவானுக்கு உகந்தவையே,
'இந்த புஷ்பம் கூடும்,
இது கூடாது' என்ற நிர்ப்பந்தம்
இல்லை. எந்தப் புஷ்பத்தைக்
கொண்டு அர்ச்சித்தாலும்
பக்தி, சிரத்தை இவைதாம்
முக்கியம். 'ந கண்ட காரிகா
புஷ்பம் தேவாய விநிவேதயேத்'
என்று, கண்டங்கத்திரிப்பூ
முதலியவை கூடா என்று
இருக்கிறதே என்றால்,
இவை எம்பெருமானுக்குத்
தகாதவை என்று சொல்வதற்காக
வந்ததல்ல; இவற்றிலுள்ள
முட்கள், இவற்றைப் பறிக்கும்போது
பாகவதர்களின் கைகளைக்
குத்திவிடும் என்பதற்காக
இவை ஆகாதவை என்று சொல்லப்பட்டது
என்று சமத்காரமாகப் பெரியோர்
கூறுவர். ஆகையால், எந்தப்
புஷ்பத்தைக் கண்டாலும்
பகவானுக்குச் சூட்டி
மகிழவேண்டும் என்று எவன்
நினைக்கிறானோ அவனுடைய
ஹ்ருதயம், நல்ல ஹ்ருதயம்.
அப்படி நினைக்காதவன்
அஸத்கல்பன்.
எல்லாப்
புஷ்பங்களும் எம்பெருமானுக்கு
உகந்தவையாயினும் சிற்சில
புஷ்பங்களுக்குச் சில
காரணங்களை இட்டு விசேஷம்
உண்டு. அப்படிப்பட்ட
புஷ்பங்களைக் கொண்டு
எம்பெருமானை அர்ச்சித்தால்
விசேஷ உகப்பு அவனுக்கு
ஏற்படும். கனகாம்பரப்
பூ ரூபத்தில் அழகு; சில
புஷ்பங்கள் வாஸனையால்
விசேஷ மேன்மை பெற்றவை;
கந்தம் ரூபம் என்ற இரண்டு
ஆகாரத்தாலும் மேன்மை
பெற்றவை சில புஷ்பங்கள்;
மல்லிகை மனோரஞ்சிதம்
போன்றவை. இம்மாதிரி
புஷ்பங்களின் இயற்கை
இருக்கிறது.
"இப்படியுள்ள
புஷ்பங்களைக் காட்டிலும்
கருநெய்தல் (உத்பலம்)
புஷ்பம் சிறந்ததாம்.
அதைக்காட்டிலும் பத்மம்
சிறந்தது. அதைக்காட்டிலும்
நூறு இதழ் கொண்ட தாமரை
சிறந்தது. இதைவிடச் சிறந்தது
ஆயிரம் இதழ் கொண்ட தாமரை.
இதைக்காட்டிலும் வெண்தாமரை
மேலானது. ஆயிரம் வெண்தாமரையைக்
காட்டிலும் துளஸீபுஷ்பம்
மேலானது. துளசியைக் காட்டிலும்
கொக்குமந்தாரை மேலானது.
அதைவிட ஸுவர்ண புஷ்பம்
சிறந்தது. அதைவிட எனக்குப்
பிரீதியைக் கொடுப்பது
வேறொன்னும் கிடையாது"
என்று பகவான் கூறினார்.
ஸர்வேஷாமேவ
புஷ்பாணாம் ஸஹஸ்ரகுணமுத்தமம்
| தஸ்மாத் பத்மம் ததா ராஜந்
! பத்மாத் து சதபத்ரகம்
|| தஸ்மாத் ஸஹஸ்ரபத்ரம்
து புண்டரீகமத: பரம் | புண்டரீகஸஹஸ்ராத்
து துளஸீ குணதோதிகா
|| பகபுஷ்பம் ததஸ்து ஸ்யாத்
ஸெளவர்ணம் து ததோதிகம்
| ஸெளவர்ணாச்ச ப்ரஸுநாத்
து மத்ப்ரியம் நாஸ்தி
பாண்டவ ||
இப்படிப் புஷ்பங்களின்
ஏற்றத்தாழ்வு சொல்லப்பட்டது.
இந்தப் புஷ்பங்களைக்
கொண்டு எம்பெருமானின்
திருவடிகளை அர்ச்சித்தால்,
அவன் மிகவும் உகந்து
அநுக்கிரகிப்பான்.
இதில்
ஒவ்வொரு புஷ்பமாக அர்ச்சிப்பதைவிட
ஒரு ஸமயத்தில் பல புஷ்பங்களைக்
கொண்டு அர்ச்சிப்பது
சிறந்தது. அதைவிடச் சிறந்தது
- இரண்டு கைகளாலும் புஷ்பங்களை
வாரி அஞ்ஜலி செய்வதுபோல்
எடுத்து அர்ச்சிப்பதே.
இப்படிக்
கைங்கரியம் செய்யும்போது
மிகவும் பக்தியினும்
சிரத்தையுடனும், 'இப்படிப்
பகவானை அர்ச்சிக்கும்
பாக்கியம் நமக்குக் கிடைத்துள்ளதே!'
என்ற ஸந்தோஷத்துடனும்,
கூலிக்கு வேலை செய்வது
போலல்லாமலும் ஸ்வயம்ப்ரயோஜனமாகவும்
கருதிச் செய்தால் நாம்
செய்யும் ஸத்காரங்களைப்
பகவான் நேரில் தலையை
வணங்கி நம்மிடத்திலிருந்து
பெற்றுக் கொள்ளுகிறான்.
யா:
க்ரியா: ஸம்ப்ரயுக்தா:
ஸ்யு: ஏகாந்தகதபுத்திபி:
| தா: ஸர்வா : சிரஸா தேவ : ப்ரதிக்ருஹ்ணாதி
வை ஸ்வயம் ||
இப்படி, எம்பெருமானை
அர்ச்சிப்பதற்கு ஏற்பட்ட
புஷ்பங்களைச் சொன்னோம்.
இவை கண்ணால் பார்க்கப்படும்
புஷ்பங்கள். நம் கண்களுக்கு
இலக்காகாதவையும், சாஸ்திரங்களை
கொண்டே அறிய வேண்டியவையுமான
புஷ்பங்கள் சில உண்டு.
இந்தப் புஷ்பங்களைக்
கொண்டு அர்ச்சித்தால்
எம்பெருமான் மிக மிக
ஸந்தோஷமடைவான். முக்கியமான
புஷ்பங்கள் அவையே. 'அவை
எவை?' என்றால் - அஹிம்சை,
இந்த்ரியநிக்ரஹம், ஸர்வபூததயை,
க்ஷமை, ஜ்ஞாநம், தபஸ், தியானம்,
ஸத்தியம் என்ற எட்டுப்
புஷ்பங்கள்.
அஹிம்ஸா
ப்ரதமம் புஷ்பம், புஷ்பம்
இந்த்ரியநிக்ரஹ: | ஸர்வ
பூததயா புஷ்பம், க்ஷமா
புஷ்பம் விசேஷத: || ஜ்ஞாநம்
புஷ்பம், தப: புஷ்பம், த்யாநம்
புஷ்பம் ததைவ ச | ஸத்யம்
அஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ:
ப்ரீதிகரம் பவேத் ||
1. அஹிம்ஸா
- பிறரை ஹிம்ஸிக்காமலிருத்தல்.
ஒருவனை கத்தியைக் கொண்டு
வெட்டுவதோ கொல்லுவதோ
ஹிம்ஸையாகும். இது மட்டுமல்ல;
பிறர் மனம் நோகும்படி
நாம் வாயால் திட்டுவதோ
செயலில் காட்டுவதோகூட
ஹிம்ஸைதான். இவை முதலிய
ஹிம்ஸைகளைப பிறருக்குச்
செய்யாமலிருப்பது அஹிம்ஸை
எனப்படும்.
2. இந்த்ரியநிக்ரஹ:-
புலன்களை அடக்குதல்.
கண் காது மூக்கு முதலிய
இந்திரியங்களை அவற்றின்
இஷ்டபடி பட்டி மேய விடாமல்
அததற்கு வகுத்த நல்ல
விஷயங்களில் பிரவேசிக்கும்படி
செய்தல் - 'ஜிஹ்வே கீர்த்தய
கேசவம்' என்ற ரீதியில்.
3.
ஸர்வபூததயா - எல்லாப்
பிராணிகளிடத்திலும்
இரக்கத்தைக் காட்டுதல்.
4.
க்ஷமா - பொறுமை. நம்மேல்
பிறர் எவ்வளவு குற்றம்
கூறினாலும் அதைப் பொருட்படுத்தாமல்
அவர்கள் விஷயத்தில் மனத்தில்
கூட விகாரம் அடையாமல்
பொறுமையுடன் இருத்தல்.
5.
ஜ்ஞாநம் - சாஸ்திரங்களைக்
கற்று எம்பெருமானை அறிதல்.
6.
தப: - தவம் செய்தல்.
7. தியானம்
- பகவானைத் தியானித்தல்.
8.
ஸத்தியம் - உண்மை பேசுதல்.
இந்த
எட்டும் பகவானுக்குப்
ப்ரீதியைக் கொடுப்பதை
முன்னிட்டுப் புஷ்பங்களாகக்
கூறப்பட்டன. வாஸ்தவத்தில்
மேற்கூறிய எட்டுக் குணங்களும்
நம்மிடம் இருந்தால் பகவான்
நம்மை அநுக்கிரகிப்பான்
என்று தாத்பரியம்.
பெரியாழ்வார்
பூச்சுட்டல் என்ற பத்துப்
பாசுரம் அநுக்கிரகித்திருக்கிறார்.
அங்கு எட்டே புஷ்பங்கள்
குறிப்பிடப்பட்டுள்ளன;
பத்து அல்லது ஒன்பது
புஷ்பங்களைச் சொல்லவில்லை.
நான்காம் பாட்டில், 'உகந்திவை
சூட்ட நீ வாராய்' என்றே
சொன்னார். அங்கு ஒரு
தனிப் புஷ்பத்தைக் குறிப்பிடவில்லை.
மூன்றாம் பாட்டில், 'பச்சைத்
தமனகத்தோடு' என்றும்,
நான்காம் பாட்டில், 'மருவும்
தமனகமும் சீர்' என்று
சொல்லி, 'உகந்திவைச்
சூட்ட நீ வாராய்' என்றும்
சொல்லியிருக்கிறபடியால்
எட்டுக்கு மேற்கொண்டும்
புஷ்பங்கள் குறிக்கப்பட்டுள்ளனவே
என்ற ஸந்தேஹம் எழலாம்.
ஆயினும், மருவும் தமனகமும்
புஷ்ப வகையில் சேர்ந்தனவா
அல்லவா என்று ஆராய்ந்தால்
அல்ல என்ற பக்ஷத்தில்,
பூச்சூட்டலில் சத்ரிந்யாயத்தால்
இதைச் சேர்த்துப் படித்தது
என்று கொள்ள வேண்டும்.
இலைகளானபடியால் புஷ்பங்கள்
என்று வைத்துக் கொள்ளும்
பக்ஷத்தில், 'செண்பகப்பூச்
சூட்ட வாராய், மல்லிகைப்பூச்
சூட்ட வாராய், கருமுகைப்பூச்
சூட்ட வாராய்' என்ற ரீதியில்
சொல்லாமல், இவைச் சூட்ட
நீ வாராய் என்று சொன்னபடியால்
இவற்றில் அதிக நைப்பர்யம்
இல்லை என்று தோன்றுகிறது.
அஹிம்ஸை முதலிய எட்டுப்
புஷ்பங்களை மனத்தில்
வைத்துக்கொண்டே புஷ்பங்களின்
பெயர்களையே குறித்து,
'சூட்ட வாராய்' என்று சொன்னது
பொருத்தமுடையது என்றும்
தோன்றுகிறது. எனவே, சாஸ்திரங்களில்
கூறிய அஹிம்ஸை முதலிய
எட்டு புஷ்பங்களை மனதில்
வைத்துக்கொண்டுதான்
இப்பதிகம் பாடினார் என்பது
தெளிவு. இதில் எட்டுப்
புஷ்பங்களில் மேற்கூறிய
எட்டுக் குணங்களையும்
அடக்கி ஊகித்து அறிந்து
கொள்ள வேண்டியது.
|